search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் அனுமதி"

    கேரளாவில் கருப்பு காய்ச்சல் என்ற அரிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வாலிபருக்கு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.

    இந்த நோய்க்கு நர்சு உள்பட 18 பேர் பலியானார்கள். இன்னும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய் வவ்வால் மூலம் பரவுவதாக கூறப்பட்டது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க மத்திய சுகாதாரக்குழு மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தனர். இதனால் கேரளாவில் தற்போது நிபா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது.

    நிபா வைரஸ் பீதி மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் கொல்லம் மாவட்டம் மலைக்கிராம பகுதியில் புதிய வகை காய்ச்சல் பரவுவதாக தகவல் வெளியானது. இப்பகுதியைச் சேர்ந்த 38 வயது வாலிபர் ஒருவர் வயிற்று வலி மற்றும் கல்லீரல் வீக்கம் காரணமாக அப்பகுதி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார்.

    அவரை பரிசோதித்த போது அவருக்கு கருப்பு காய்ச்சல் என்ற அரிய காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் டாக்டர்களுக்கு ஏற்பட்டது. எனவே அவர், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கருப்பு காய்ச்சல் மண் பூச்சிகள் மூலம் பரவும் என்று கூறப்படுகிறது. இது நிபா வைரஸ் போல வேகமாக பரவும் தன்மை கொண்டது இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் பாதிப்பை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது.

    இக்காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு வயிற்று வலியும், உடல் சோர்வும் ஏற்படும். கல்லீரல், மண்ணீரல் வீக்கமும் உருவாகும். ரத்த பரிசோதனை மூலமே இந்நோயை கண்டுபிடிக்க முடியும் என டாக்டர்கள் கூறி உள்ளனர்.

    கேரளாவில் திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு 2005-ம் ஆண்டிலும் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இது போன்ற நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே உடல் சோர்வு, வயிற்று வலி இருப்பவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதுபற்றி கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே. ஷைலாஜா கூறியதாவது:-

    கேரளாவில் புதியதாக பரவும் நோயை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் விழுமுலா கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    வீடு வீடாகச் சென்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வும் நோய் பாதிப்பு இருக்கிறதா? என்ற ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பீதி அடைய வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×